வெள்ளி, 4 மே, 2012

பிளாஸ்டிக் உலகம்


                                                    பிளாஸ்டிக் உலகம் 

நாம் தற்போது பிளாஸ்டிக் மயமான ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.உலகத்தின் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் பிளாஸ்டிக் உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆடைகள், போன், பேனா, பாத்திரங்கள், கார், கம்ப்யுட்டர்..... எங்கும் பிளாஸ்டிக்கின்  உபயோகம் தவிர்க்க முடியாததாகி நம் தினசரி வாழ்க்கையோடு இணைந்து விட்டது என்றே கூறலாம்.



1855 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்ற ஆங்கிலேயர் செயற்கை தந்தத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.தாவர மூலப்பொருளான செலுலோசையும் நைட்ரிக் ஆசிட்டையும் ஒரு இணைப்பான் மூலமாகக் கலந்து ஒரு பொருளை உருவாக்கி அதற்கு பார்கசின் என்று பெயரிட்டார். 

அதை அடுத்து லியோ ஹென்றிக் பேக்லன்ட் என்ற பெல்ஜிய அமெரிக்கர் மின்கம்பிகளை பாதுகாப்பாக மூடுவதற்கு ஒரு கலவையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் 1912 ஆம் ஆண்டில் பேக்லைட் என்ற பொருளைவெளியிட்டார்.இதுதான் உலகின் முதல் பிளாஸ்டிக். தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளின் விளைவாக பலவகையான பிளாஸ்டிக்குகள் உருவாகின.

சுலபமான தயாரிப்பு முறை, பன்முகப்பயன், குறைந்த விலை ஆகியன போன்ற காரணங்களால் மிகச்சிறிய பேப்பர் களிப்பிலிருந்து மிகப்பெரிய விண்வெளி ஓடம் வரை பிளாஸ்டிக்கின் பயன்பாடு அளவிட முடியாததாகி விட்டது.பிளாஸ்டிக் மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து விட்டது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக அது அமைந்து விட்டது பன்நெடுன்காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்த மரம், கல், உலோகம், காகிதம் ,தோல்,கண்ணாடி  , செராமிக் ஆகியவற்றை ஒரேயடியாக ஓரங்கட்டிவிட்டு பிளாஸ்டிக் நம் சமையலறை வரையிலும் புகுந்து ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது.

நம் குழந்தைகளுக்குக் கூட நாம் தயாப்பர்களைத்தான் அணிவிக்கிறோம்.பிலாச்டிக்கிலாளான பொம்மைகளைத்தான் விளையாடக் கொடுக்கிறோம்.பிளாஸ்டிக் பாட்டிலில்தான் பால் கொடுக்கிறோம்.பிளாஸ்டிக் டப்பாவில்தான் சாப்பாடு கொடுக்கிறோம்.பிளாஸ்டிக் என்ற ஒரு விந்தைப் பொருள் கண்டுபிடிக்கப் பட்டதற்காக நாம் சந்தோசப்பட்ட,பெருமைப்பட்ட காலம் ஒன்றிருந்தது.ஆனால் இப்போது.....?பிளாஸ்டிக் உலகத்தின் இன்னொரு பக்கத்தைக் காண வேண்டிய காலம் வந்திருக்கிறது.அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

இந்தியாவில் விற்பனையாகின்ற குழந்தைகளுக்கான பிவிசி பொம்மைகளில் லீட் மற்றும்  காட்மியம் ஆகிய மிகுந்த கேடு விளைவிக்கும் விஷப்பொருட்கள் அதிக அளவில் கலந்துள்ளன என்ற அதிர்ச்சி தரும் உண்மை டெல்லியைச் சேர்ந்த டாக்சிக் லிங்க் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.இந்தப் பொருட்கள் எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியவை. மனச்சிதைவை ஏற்ப்படுத்தக் கூடியவை. சிந்தனைத் திறனை சிதைக்கக் கூடியவை.

பெட் பாட்டில்கள் பாதுகாப்பானவை என்று நம்மால் கருதப்பட்டு மிகச்சாதாரணமாகப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டாக்டர் வில்லியம் சோடிக் என்ற நிபுணர் பாட்டில் நீரைக் குடிக்காதீர்கள் என்று எச்சரிக்கிறார்.'ஆன்டிமோனி' என்பது ஒரு வேதிப்பொருள். இது நமது உடலில் சிறிய அளவில் கலந்து விட்டாலே தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் உண்டாக்கும்.அதிக அளவில் உட்கொண்டால் கடுமையான வாந்தியையும் மரணத்தையும் விளைவிக்கும்.பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரில் இந்த 'ஆன்டிமோனி' உருவாகிறது.இது ஆபத்தை விளைவிக்கும் அளவில் இல்லை என்றாலும் நீர் பாட்டிலில் இருக்கும் காலம் அதிகரிக்க அதிகரிக்க இதன் அளவு அதிகமாகிறது என்கிறார் சோடிக்.

பிளாஸ்டிக்கினால் உண்டாகின்ற இன்னொரு மோசமான பாதிப்பு கருச்சிதைவு.ஏறத்தாழ 5 சதவீத கர்ப்பிணிப் பெண்களிடம் 'Anueploidy' என்கிற குரோமோசோம் மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கருச்சிதைவும் குறைப்பிரசவமும் ஏற்ப்படுகின்றன.BPA [Bisphenol-A' என்ற வகை ப்ளாச்டிக்கைப் பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவு இது.கெடுதல் இல்லாத பிளாஸ்டிக் இருக்கிறதே என்று சிலர் வாதம் செய்யலாம்.ஆனால் எந்த வாதமும் இதோ இங்கே நாம் அறியப்போகும் உண்மைகளின் முன்னாள் தகர்ந்து போகின்றன.

பிளாஸ்டிக் சுலபமாக அழிவதில்லை.அதற்க்கு நூறு ஆண்டுகள் இல்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.பிளாஸ்டிக் மக்கிப்போகக்கூடிய பொருளல்ல.மனிதன் படைத்த ப்ளாச்டிக்கின் உள்கட்டுமான அமைப்பைச் சிதைக்கவல்ல நுண்ணுயிரியை [பாக்டீரியா] இயற்கையால் இதுவரையில் உருவாக்க முடியவில்லை அந்தவகையில்  மனிதன் இயற்கையை மிஞ்சிவிட்டாலும் இப்போதுதான் உண்மையில் தோற்றது யார் என்பது தெரிய வருகிறது.ஒவ்வொருவராக மனிதகுலமே அழிந்து போகலாம். ஆனால்  மனிதன் படைத்த பிளாஸ்டிக்கின் எந்த ஒரு சிறுதுண்டும்  அழியாது......எவ்வளவு பயங்கரமான விஷயம் இது..?

நண்பர் பாலச்சந்திரன் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்.சென்னை பெசன்ட் நகரில் வசிக்கிறார்.தினமும் வாக்கிங் செல்பவர் ஒருநாள் கடற்கரையில் கிடந்த குப்பைகளைப் பார்த்து விட்டு ஒரு முடிவு எடுத்தார்.மறுநாள் காலையில் ஒரு பெரிய பையை எடுத்துச் சென்று குப்பைகளைப் பொறுக்கி அப்புறப் படுத்தினார்..அடுத்த நாள் காலை கடற்க்கரைக்குச் சென்றபோது அதே அளவு குப்பை மறுபடி சேர்ந்திருந்தது.மறுநாளும் அப்படியே. இந்த நிலைமை முடிவே இல்லாது நீண்டது.நண்பர் சோர்ந்து போனார். 

உலகத்தின் எல்லாக் கடற்கரைகளிலுமே இன்று இந்த நிலைதான்.

1950 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில் சுமார் 1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகள் நம் பூமியின் மீது கொட்டப்பட்டுள்ளன.அது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இங்கேதான் இருக்கப்போகிறது. ஹவாய் கடற்கரையில் இறந்து போன ஒரு ஆமையின் வயிற்றில் சுமார் 1000 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பசிபிக் கடல் பகுதியில் ஒரு அல்பட்ராஸ் பறவையின் வயிற்றில் 1603 பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. 


            எங்கள் பக்கத்துக் கிராமம் ஒன்றில் சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது பிளாஸ்டிக் கலந்த செயற்கை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.அந்த இலைகளைத் தின்ற 15 பசுக்களும் எருமைகளும் செத்துப்போயின.சுற்றுலாப் பயணிகள் விட்டெரிகின்ற பிளாஸ்டிக் குப்பைகளை உணவென்று எண்ணிச் சாப்பிடுகின்ற காட்டு யானைகள் இறந்து போகின்ற துயரச் சம்பவங்கள் நமது நாட்டில் நிறைய நடக்கின்றன.இறந்து விட்ட பறவைகள்,விலங்குகளின் உடல்கள் அழிந்து போகின்றன.ஆனால் அந்த உடல்களுக்குள் இருக்கின்ற பிளாஸ்டிக் அழிவதில்லை.

வருடம் தோறும் மழைக்காலங்களில்  நமது நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு மிகுந்த சீரழிவை உண்டாக்குகிறது.நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிற பாலிதீன் பைகள் கழிவு நீர்க் கால்வாய்களில் விழுந்து அதை அடைத்துக் கொள்வதால்தான் இந்த சீரழிவு உண்டாகிறது.பூமியின் பரப்பில் படிந்து மூடிக் கொள்கின்ற இந்தப்பைகள் மழை நீரை உள்ளே இறங்கவிடாமல் தடுக்கின்றன .அதனால் நிலத்தடி நீர் சேமிப்பு தடுக்கப்படுகிறது.பாலிதீன் பைகளால் ஏற்படும் தீங்கைக் குறைக்கும் விதமாக ரீ சைக்ளிங் எனப்படுகின்ற மறு சுழற்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் அதனால் எந்தப்பயனும் இல்லை.மொத்தப் பயன்பாட்டில் வெறும் 1 %சதவிகிதப் பைகளே மறு சுழற்ச்சி செய்யப் படுகின்றன.

இப்போது பல நாடுகள் பாலிதீன் பைகளின் பயன்பாட்டுக்கு தடை விதித்திருக்கின்றன.இந்தியாவிலும் கூட சில நகரங்களில் இந்தத் தடை அமலில் உள்ளது.. .   

 பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து அழிக்க முயற்சிப்பது எல்லாவற்றையும் விடக் கேடானது.பிளாஸ்டிக்கை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு, டையாக்சின் மற்றும் பயூரான் ஆகிய வாயுக்கள் உண்டாகின்றன.இந்த வாயுக்கள் புற்று நோயையும் பாலினக் குறைபாடுகளையும் மற்றும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்ப்படுத்துகின்றன.தாய்மை அடைந்திருக்கும் பெண்கள் இதை சுவாசிக்க நேர்ந்தால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி குறைபடுகிறது.வளரும் குழந்தைகளிடம் ஆண்மைக் குறைபாட்டையும் முன்கூட்டியே பருவமடைதலையும் உண்டாக்குகின்றன.ப்ளாஸ்டிக்கை எரிப்பதனால் உண்டாகும் சாம்பல் மண்ணில் படிந்து நிலத்தை விஷமாக்குகிறது.அந்த நிலத்தில் விளைகின்ற தானியத்தையோ காய்கறிகளையோ சாப்பிடும்போது மனித உடலில் கடும் விளைவுகள் ஏற்ப்படுகின்றன. புற்களை மேயும் கால்நடைகள் மூலமாகவும் பெரும் பாதிப்பு உண்டாகிறது. எனவே பொதுவாக கேடில்லாத ப்லாச்டிக்கே இல்லை என்பதுதான் உண்மை. 

சரி, இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?                                                                                                   


இந்த பூமியை,இந்த இயற்கையை,நமது வருங்கால சந்ததியைக் காப்பாற்றுவதுதான் இப்போது நமது முக்கியக் கடமை.அதற்காக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்படும் இடங்களில் மாற்றுப் பொருள்களை உபயோகிக்க வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாஸ்டிக்கை இந்த உலகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து நாமே உருவாக்கிக் கொண்ட நமது பழக்கங்களை இனி மாற்றிக்கொள்வோம்.பொருட்களை வாங்க காகிதப் பைகளையோ அல்லது துணிப் பைகளையோ பயன்படுத்துவோம்.சணல் பைகளையும் உபயோகிக்கலாம.குழந்தைகளுக்கு மரத்தாலும் துணியாலும் செய்யப் பட்ட    பொம்மைகளையும் விளையாட்டுப் பொருள்களையும் கொடுங்கள்.

சமயலறையில் செராமிக் பாத்திரங்களையும் தட்டுகளையும் ஸ்ட்யின்லஸ் ஸ்டீல் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். காய்கறிகள்,பழங்கள் வைப்பதற்கு மூங்கிலால் நெய்யப்பட்ட  கூடைகளையும் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.

குடிநீர் வைத்துக்கொள்வதர்க்கும்  எடுத்துச் செல்வதற்கும் இன்சுலேடட் எவர் சில்வர் குடுவைகள் சிறந்த தேர்வாகும்.யூஸ் அன்ட் த்ரோ என்று சொல்லப்படுகின்ற பாலித்தீன் குவளைகளைத் தூர எறிந்து விட்டு காகிதக் குவளைகளை பயன்படுத்தலாம்.

நமக்கு முன்னே நிற்கின்ற பயங்கரத்தை  உணர்ந்து கொள்வோம்.இந்த உலகத்துக்கு நாம் ஒரு உதவி செய்வோம்.அதன் மூலமாக நமக்கும் உதவி செய்து கொள்வோம்.இப்போது இல்லையேல் எப்போதுமில்லை.இப்போதே முடிவு செய்வோம். முடியாதது என்று எதுவுமில்லை.                                        
            

பிளாஸ்டிக் குப்பைகளை இந்த மாதிரி தரையில வீசி  எரியாதீங்கன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கிறாங்களா இந்த மனுஷங்க....


தொடரும்.......




'பசுமை நிறைந்த நினைவுகளே ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/06/blog-post.html






' உலகத் திரைப்பட அறிமுகம் ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/08/to-end-all-wars.html










2 கருத்துகள்:

  1. plastic patriya katurai miga nandragavum, arthamulladhagavum irundhadhu.. plastic enginra emanin theriyadha pakkangalai thelivupaduthiyadharku mikka nandri.. valthukal..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்.தொடர்ந்து வாசித்து கருத்துகளை இடுங்கள்.

      நீக்கு